வரும் டிசம்பர் மாதம் தமிழ்நாடு பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் தமிழ்நாடு மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் பாம்பன் பாலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பாலமாகும். இதன் காரணமாக கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார் பிரதமர் மோடி. இதன் பணிகள் தற்போது முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனையொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இப்பாலத்தின் சேவையினை அடுத்த மாதம் மோடி துவக்கி வைக்கவுள்ளார் என்று தெரிகிறது. இதனிடையே தூத்துக்குடி, குலசேகரப்பட்டினம் பகுதியில் அமையவுள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் 2ம் ஏவுதளத்திற்கு மோடி இந்த பயணத்தின் போது அடிக்கல் நாட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனவரியில் நிறைவடைகிறது அண்ணாமலையின் நடைப்பயணம்
நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024ம் ஆண்டு நடக்கவுள்ள நிலையில் மோடியின் இந்த வருகை அரசியல் வட்டாரங்களில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த வருகையின் பொழுது தமிழகத்தில் பாஜக'வின் செயல்பாடுகள் மற்றும் கூட்டணிகள் குறித்தும் மோடி பாஜக நிர்வாகிகளோடு கலந்து ஆலோசிப்பார் என்று எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை துவங்கி நடத்தி வரும் 'என் மண் என் மக்கள்' என்னும் நடைப்பயணம் வரும் ஜனவரி மாதம் நிறைவடையவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில், அதன் இறுதி விழாவில் பங்கேற்கவும் மோடி தமிழகம் வருவார் என்று கூறப்பட்டு வருகிறது.