ஐநா சபையின் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார் பிரதமர் மோடி
ஜூன் 21 ஆம் தேதி ஐநா தலைமையகத்தில் நடைபெற இருக்கும் 9 வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க இருக்கிறார். யோகா பயிற்சியின் பல நன்மைகள் குறித்து உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. யோகாவின் முக்கியத்துவத்தை டிசம்பர் 2014இல் அங்கீகரித்த ஐக்கிய நாடுகள் சபை, ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இந்நிலையில், சர்வதேச யோகா தினத்தின் 9வது தின கொண்டாட்டம் வரும் ஜூன் 21 ஆம் தேதி காலை 8-9 மணி வரை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் உள்ள வடக்கு புல்வெளியில் நடைபெற இருக்கிறது.
பங்கேற்பாளர்கள் யோகாவுக்கு ஏற்ற உடைகளை அணிந்து வர வேண்டும்: ஐநா
இந்த கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்க பிரதமர் நரேந்திர மோடியை ஐநா சபை அழைத்துள்ளது. ஒரு இந்திய தலைவர் ஐ.நா. தலைமையகத்தில் யோகா அமர்வுக்கு தலைமை தாங்குவது இதுவே முதன்முறையாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த யோகா அமர்வில் ஐ.நா.வின் உயர்மட்ட அதிகாரிகள், தூதர்கள், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் உலகளாவிய மற்றும் புலம்பெயர் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு அமர்வில் கலந்து கொள்ள இருக்கும் விருந்தினர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் யோகாவுக்கு ஏற்ற உடைகளை அணிந்து வருமாறு ஐநா சபை அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதில் பங்கேற்பவர்களுக்கு யோகா மேட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.