ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு(ITPO) வளாகத்தை இன்று(ஜூலை 26) பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். ITPO வளாகத்தில் மறுசீரமைப்பு பணிகள் நிறைந்தவடைந்து மீண்டும் அது திறக்கப்பட உள்ளது. பிரகதி மைதான வளாகம் என்றும் அழைக்கப்படும், ITPO வளாகம் தோராயமாக 123 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாகும். இந்தியாவின் மிகப்பெரிய கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் இந்த வளாகத்தில் தான் பொதுவாக நடத்தப்படும். இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடியின் ஹவான் பூஜையுடன் இந்த வளாகத்தின் தொடக்க விழா தொடங்கும். அதைத் தொடர்ந்து, கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்படும்.
உலகின் முதல் 10 கண்காட்சி மற்றும் மாநாட்டு வளாகங்களில் ஒன்று
பின்னர், மாலை, 6:30 மணிக்கு ஒரு பிரமாண்டமான தொடக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ITPOக்கு திரும்புவார். இந்த விழாவில் தான் G20 முத்திரை மற்றும் நாணயம் வெளியிடப்படும். அதன் பிறகு, இரவு 7.05 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றுவார். பிரகதி மைதானத்தின் மறுவடிவமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, IECC(ஒருங்கிணைந்த கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம்) என்ற ஒரு நவீன வளாகம் கட்டப்பட்டுள்ளது. இது உலகின் முதல் 10 கண்காட்சி மற்றும் மாநாட்டு வளாகங்களில் ஒன்றாகும். ஜெர்மனியில் உள்ள ஹானோவர் கண்காட்சி மையம், ஷாங்காயில் உள்ள தேசிய கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம் (NECC) போன்ற மகத்தான வளாகங்களுக்கு போட்டியாக இது விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.