பதவியை ராஜினாமா செய்தார் பிரதமர் மோடி: ஜூன் 8ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளதாக தகவல்
பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் குழுவின் ராஜினாமாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். 292 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை தாண்டி என்டிஏ வெற்றி பெற்றதால், நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜூன் 8ம் தேதி பிரதமராக பதவியேற்க வாய்ப்புள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இந்தியாவில் ஆட்சியைத் தக்கவைத்து கொள்ளும் இரண்டாவது பிரதமராக மோடி இருப்பார். முன்னதாக, பொது தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்ய நடத்தப்ட்ட மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். மேலும் அடுத்த அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான விஷயங்கள் குறித்தும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரும் கூட்டம்
பிரதமர் இல்லத்தில் இன்று காலை 11.30 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கியது. மோடி 2.0 அமைச்சரவை மற்றும் அமைச்சர்கள் குழுவின் கடைசி கூட்டம் இதுவாகும். ஜூன் 16 ஆம் தேதியுடன் முடிவடையும் தற்போதைய மக்களவையையும் விரைவில் கலைக்கப்படும். இதற்கிடையில், இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ள கூட்டணிக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஆட்சி அமைப்பது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களிடம் ஆலோசனை நடத்தப்படும். ஜேடியூ தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் மற்றும் அடுத்த ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.