'ஜெயலலிதா குறித்து கொச்சையாக பேசிய திமுக': பிரதமர் மோடி குற்றச்சாட்டு
தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை இன்று நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாக்கும் வகையில், திமுக கட்சி பெண்களை அவமரியாதை செய்வதாகவும், தமிழகத்தை "பழைமைவாத சிந்தனையில் சிக்க வைத்துள்ளதாகவும்" குற்றம்சாட்டினார். 2024ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து எட்டாவது முறையாக தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான 'இண்டியா' கூட்டணியையும் சாடினார். ஜெயலலிதாவைக் குறிப்பிட்டு பேசிய அவர், "திமுக அவரை(ஜெயலலிதாவை) எப்படி நடத்தினார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்... அவரைப் பற்றி கொச்சையான கருத்துகளைஅவர்கள் பரப்பியது எங்களுக்குத் தெரியும்" என்று கூறினார்.
"திமுக, பெண்களை மதிக்கவில்லை": பிரதமர் மோடி
"தமிழ்நாடு பெண்களை மதிக்கிறது... ஆனால் இண்டியா கூட்டணியும் திமுகவும் பெண்களை மதிக்கவில்லை. 'சக்தியை அழிப்பேன்' என்று ராகுல் காந்தி கூறினார், மற்றொருவர்(முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின்) சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று கூறுகிறார். தமிழகத்தை பழைய சிந்தனைகளிலும்... பழைய அரசியலிலும் சிக்க வைக்க தி.மு.க நினைக்கிறது. திமுக கட்சி ஒரு குடும்பத்தின் 'கம்பெனி' ஆகிவிட்டது." என்று பிரதமர் மோடி திமுகவையும் காங்கிரஸையும் விமர்சித்தார். ராகுல் காந்தி மற்றும் உதயநிதி ஸ்டாலினைத் தாக்கி பேசியது எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான பிரதமர் மோடியின் வழக்கமான தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் ஜெயலலிதாவை குறிப்பிட்டு பேசியிருப்பது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.