
யுபிஎஸ்சி தேர்வர்களின் புதிய நம்பிக்கை பிரதிபா சேது; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு
செய்தி முன்னோட்டம்
தனது 125 வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, யுபிஎஸ்சி தேர்வர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும் பிரதிபா சேது (Pratibha Setu) என்ற திட்டத்தைப் பாராட்டினார். இந்தத் திட்டத்தை "திறமையின் பாலம்" என்று குறிப்பிட்ட பிரதமர், யுபிஎஸ்சி தேர்வில் அனைத்து நிலைகளையும் கடந்து, ஆனால் இறுதிப் பட்டியலில் இடம்பெறாத ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இது இரண்டாவது வாய்ப்பை அளிப்பதாகக் கூறினார். பிரதமர் மோடி கூறுகையில், "யுபிஎஸ்சி நாட்டின் கடினமான தேர்வுகளில் ஒன்றாகும். இறுதிப் பட்டியலில் இடம்பெறாத பல திறமையான மாணவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத நேரமும் பணமும் செலவாகும். இதைத் தவிர்ப்பதற்காகத்தான் 'பிரதிபா சேது' என்ற டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது." என்றார்.
தனியார் நிறுவனங்கள்
தனியார் நிறுவனங்களில் பணி
பிரதமர் மோடி, "யுபிஎஸ்சி தேர்வின் அனைத்து நிலைகளையும் கடந்து, இறுதிப் பட்டியலில் இடம்பெறாத மாணவர்களின் தரவுகளை இந்த போர்டல் சேமித்து வைக்கும். இதன் மூலம், தனியார் நிறுவனங்கள் இந்த மாணவர்களைப் பற்றி அறிந்து, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும்." என்றார். முன்னதாகப் 'பொது வெளிப்படுத்தல் திட்டம்' (Public Disclosure Scheme) என்று அழைக்கப்பட்ட இந்தத் திட்டம், யுபிஎஸ்சியின் ஒரு முயற்சியாகும். இத்திட்டம், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற முடியாத திறமையான மாணவர்களை இணைக்கிறது. இந்த மாணவர்கள் நேர்காணல் உட்பட அனைத்துத் தேர்வு நிலைகளையும் வெற்றிகரமாகக் கடந்தவர்கள். ஆனால், குறைந்த காலியிடங்கள் காரணமாக அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.
துறைகள்
போரட்டலில் உள்ள துறைகள்
தற்போது, சிவில் சர்வீசஸ் தேர்வு, இந்திய வனத்துறை சேவை, மத்திய ஆயுதப்படை, பொறியியல் சேவை போன்ற பல்வேறு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்களின் தரவுகள் இந்த போர்டலில் சேர்க்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் இந்த போர்டலில் பதிவு செய்து, அதன் மூலம் மாணவர்களின் தரவுகளைப் பெறலாம். நிறுவனங்கள் கல்வித் தகுதி, தேர்வு விவரங்கள் மற்றும் தொடர்புத் தகவல்களைப் பயன்படுத்தித் தங்களுக்குப் பொருத்தமான திறமைகளை நேரடியாகத் தேர்வு செய்ய முடியும். இந்தத் திட்டத்தின் மூலம், இந்தத் தேர்வர்களின் கடின உழைப்பு வீணாகாமல், தகுதியான வேலை வாய்ப்புகளைப் பெற உதவும் என்று கூறப்படுகிறது.