8,931 நாட்கள் ஆட்சி: இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகித்த அரசுத் தலைவர்; பிரதமர் மோடி புதிய சாதனை
செய்தி முன்னோட்டம்
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மகத்தான மைல்கல்லைப் பிரதமர் நரேந்திர மோடி எட்டியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தின் தலைவராக மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதன் மூலம் சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் (8,930 நாட்கள்) சாதனையை அவர் முறியடித்துள்ளார். குஜராத் முதலமைச்சராகவும், நாட்டின் பிரதமராகவும் சேர்த்து மொத்தம் 8,931 நாட்களைப் பிரதமர் மோடி இன்று (மார்ச் 22) கடந்துள்ளார். இதன் மூலம் ஒரு தலைமைப் பொறுப்பில் தனது 25வது ஆண்டில் அவர் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறார்.
வகித்த பதவிகள்
கடந்து வந்த பாதை
அக்டோபர் 7, 2001 முதல் மே 21, 2014 வரை 13 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத் மாநிலத்தை வழிநடத்தினார். மே 26, 2014 அன்று இந்தியாவின் 14வது பிரதமராகப் பதவியேற்றார். 2014, 2019 மற்றும் 2024 ஆகிய மூன்று தொடர்ச்சியான மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று, நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாகப் பிரதமரான முதல் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். பிரதமர் மோடியின் மற்ற சில சாதனைகள் பின்வருமாறு:- சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்து, இந்தியாவின் பிரதமரான முதல் தலைவர் இவரே. காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் தலைவராக மக்களவையில் முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற முதல் பிரதமர். பிரதமராவதற்கு முன் நீண்ட காலம் முதலமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.