இலவச மின்சார திட்டத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி
சூரிய சக்தி மற்றும் நிலையான முன்னேற்றத்தை அதிகரிக்க, பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது அரசாங்கம் 'பிஎம் சூர்யா கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா' திட்டத்தை தொடங்குவதாக அறிவித்தார். இது ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.75,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். "மேலும் நிலையான வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வுக்காக, நாங்கள் PM சூர்யா கர்: முஃப்ட் பிஜிலி யோஜனாவை அறிமுகப்படுத்தியுள்ளோம். 300 யூனிட் வரை இலவச மினசாரம் வழங்குவதன் மூலம் 1 கோடி குடும்பங்களை ஒளிரச் செய்வதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. " என்று பிரதமர் கூறியுள்ளார்.
தேசிய ஆன்லைன் போர்ட்டல் மூலம் இலவச மின்சார திட்டத்திற்கு மானியம்
இந்த திட்டத்தின் கீழ், மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும் கணிசமான மானியங்கள் முதல், அதிக சலுகைக் கடன்கள் வரை, மக்களுக்கு எவ்வித செலவுச் சுமையும் இல்லாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அனைத்து பங்குதாரர்களும் தேசிய ஆன்லைன் போர்ட்டலுடன் ஒருங்கிணைக்கப்படுவார்கள் என்று பிரதமர் மேலும் கூறினார். இந்தத் திட்டத்தை பிரபலப்படுத்த, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகள் தங்கள் அதிகார வரம்புகளில் உள்ள வீடுகளில் சூரிய சக்தி கூரைகளை அமைக்க ஊக்குவிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். "அதே நேரத்தில், இந்தத் திட்டம் அதிக வருமானம், குறைந்த மின் கட்டணங்கள் மற்றும் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும்" என்று பிரதமர் கூறினார்.