ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தெலுங்கானாவில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தனது தெலுங்கானா பயணத்தின் போது சுமார் ₹6,100 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, இன்று உலகம் முழுவதும் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருகிறது என்று கூறினார். "இன்றைய இந்தியா இளமை மற்றும் ஆற்றல் நிறைந்தது. நாட்டின் எந்தப் பகுதியும் வளர்ச்சியில் பின்தங்கக் கூடாது. தெலுங்கானா அனைத்து அண்டை பொருளாதார வழித்தடங்களையும் இணைக்கும் மையமாக மாறி வருகிறது. தெலுங்கானாவில் உள்ள தொழில்கள் மற்றும் சுற்றுலா இதன் மூலம் பயனடைகின்றன." என்று அவர் மேலும் கூறினார்.
ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தெலுங்கானாவில் செயல்படுத்தப்படும்
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரும், தெலுங்கானாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பாஜக தலைவருமான ஜி கிஷன் ரெட்டி, பாஜக எம்பி பண்டி சஞ்சய் குமார் உள்ளிட்ட தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிதின் கட்காரி, "நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பிரதமர் மோடி அதிக முன்னுரிமை அளித்துள்ளார். தெலுங்கானாவில் இதுவரை ₹1.10 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன/நடந்து வருகின்றன/தொடங்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் தெலங்கானா மாநிலத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்." என்று பேசினார்.