டேராடூன் மற்றும் டெல்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையினை துவக்கி வைத்தார் மோடி
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மற்றும் டெல்லி இடையே வந்தே பாரத் ரயில் சேவையினை பிரதமர் மோடி அவர்கள் காணொளி காட்சி மூலமாக இன்று(மே.,25) கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து மாநில ரயில்கள் அனைத்தையும் 100 சதவீதம் மின்மயமாக்கும் திட்டத்தினையும் இந்திய பிரதமர் மோடி அவர்கள் இன்று காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய பிரதமர் மோடி அவர்கள், உலகளாவிய சுற்றுலா பயணிகள் இந்தியாவினை சுற்றி பார்க்கவும், அதனை புரிந்து கொள்ளவும் இங்கு வர ஆர்வம் காட்டுகிறார்கள். இது உத்தரகாண்ட் மாநிலத்திற்கு நல்லதொரு வாய்ப்பு என்று கூறியுள்ளார்.
314 கிமீ., தூரத்தினை நான்கு மணி நேரம் 45 நிமிடங்களில் கடக்கும் வந்தே பாரத் ரயில்
தொடர்ந்து பேசிய அவர், தனது சுற்றுப்பயணத்தினை குறிப்பிட்டு முழு உலக நாடுகளும் இந்தியாவை மிக நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தார். டேராடூன் மற்றும் டெல்லி இடையேயான இந்த வந்தே பாரத் ரயிலானது 314 கிமீ., தூரத்தினை நான்கு மணி நேரம் 45 நிமிடங்களில் கடந்து விடும் என்று கூறப்படுகிறது. தற்போதுவரை டேராடூன் மற்றும் டெல்லி இடையே இயங்கி வரும் சதாப்தி என்னும் ரயிலானது இந்த தூரத்தினை கடக்க 6 மணி நேரம் 10 நிமிடங்களை எடுத்து கொள்கிறது என்றும் தெரிகிறது. வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற 6 நாட்கள் இந்த வந்தே பாரத் ரயில் சேவையானது செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.