ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரயிலினை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
ஒடிசா மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையினை பிரதமர் மோடி இன்று(மே.,18) காணொளிக்காட்சி மூலம் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். இந்த வந்தேபாரத் ரயிலானது ஒடிசா மாநிலத்தின் பூரியில் இருந்து மேற்குவங்க மாநிலம் ஹவுரா வரை செல்லும் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி அவர்கள், வந்தேபாரத் ரயிலானது ஹவுரா மற்றும் பூரி இடையே மத-கலாச்சாரம் மற்றும் ஆன்மீக இணைப்பினை மேலும் வலுப்படுத்தும். நம் நாடு சொந்தமாக வந்தேபாரத் ரயில்களை தயாரித்து பல்வேறு நாடுகளுக்கு வழங்கிவருகிறது. அதேபோல்,5ஜி-யினை சொந்தமாக தயாரித்து தொலைத்தூரப்பகுதிகளுக்கு விநியோகித்து வருகிறது என்று பெருமிதம் கொண்டார். இதனைத்தொடர்ந்து, ஒடிசாவில் ரூ.8ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வேத்திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கிவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.