பிரதமர் மோடி 9 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை
கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பணியாற்றி வரும் பிரதமர் மோடி, தனது பதவி காலத்தில் ஒரு நாள் கூட பணியில் இருந்து விடுப்பு எடுக்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது. புனேவைச் சேர்ந்த தொழில்முனைவோர் ஆர்வலர் பிரஃபுல் பி சர்தா, பிரதமர் அலுவலகத்தில் ஒரு ஆர்டிஐ மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி 2014இல் இந்தியாவின் பிரதமராக பதவியேற்றதில் இருந்து எத்தனை நாட்கள் அலுவலகத்திற்கு வந்தார் என்பது தான் அதில் கேட்கப்பட்டிருந்த முதல் கேள்வியாகும். அந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகம், "பிரதமர் எந்நேரமும் பணியில்தான் இருந்தார். பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து எந்த விடுமுறையும் எடுக்கவில்லை" என்று பதிலளித்துள்ளது.
9 ஆண்டுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி
"இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பிறகு இன்றுவரை பிரதமர் நரேந்திர மோடி எத்தனை நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு எடுத்து கொண்டார்?" என்பது தான் அந்த மனுவில் கேட்கப்பட்டிருந்த இரண்டாவது கேள்வியாகும். அந்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் அலுவலகம், மே 2014 இல் இந்தியப் பிரதமராக பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட(இந்தியா மற்றும் வெளிநாடுகள் உட்பட) நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன், 2016ல், இதே போன்ற ஆர்டிஐ மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போதும் பிரதமர் மோடி எந்த விடுப்பும் இதுவரை எடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.