இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியை ஒன்றாக காண இருக்கும் இருநாட்டு பிரதமர்கள்
பார்டர்-கவாஸ்கர் தொடரின் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியைக் காண பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார் 9) குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு சென்றார். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் உடன் பிரதமர் மோடி இந்த கிரிக்கெட் போட்டியை காணவுள்ளார். டாஸ் போடுவதற்கு முன்னதாக, மைதானத்தைச் சுற்றி மரியாதை செலுத்திய இரு பிரதமர்களும் பலத்த ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டனர். "இரு நாடுகளையும் இணைக்கும் விஷயங்களில் ஒன்று கிரிக்கெட். அகமதாபாத்தில் நடைபெறும் போட்டிகளின் முதல் நாளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரதமர்கள் கலந்துகொள்வது நன்றாக இருக்கும்." என்று ஆஸ்திரேலிய உயர் ஆணையர் பாரி ஓ'ஃபாரல் கூறியுள்ளார். இதன் பிறகு, ஆஸ்திரேலிய பிரதமர் ஹோலி கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார்.
இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகள்
தற்போது பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இறுதி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும். இறுதி போட்டி ஜூன் 7 முதல் லண்டனில் நடைபெறுகிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மூன்று நாட்களில் முடிவடைந்தது. இந்தூரில் நடந்த மூன்றாவது டெஸ்டில் மூன்று நாட்களுக்குள் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.