சவூதி இளவரசரை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி: இருதரப்பு பேச்சுவார்த்தையில் என்ன விவாதிக்கப்படும்?
இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வந்திருக்கும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் இன்று(செப் 11) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட உள்ளது. சவூதி அரேபிய இளவரசர் மூன்று நாள் சுற்றுப்பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி வந்தடைந்தார். அவரது சுற்றுப்பயணம் ஜி20 உச்சி மாநாட்டுடன் தொடங்கியது. இந்நிலையில், அவர் இன்று டெல்லியின் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது, இந்தியா மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையேயான இருதரப்பு ஒப்பந்தமான மூலோபாய கூட்டாண்மை கவுன்சிலின் முதல் தலைவர்கள் கூட்டம் நடைபெறும்.
நீண்ட நெடுங்காலமாக நல்லுறவு கொண்டிருக்கும் இந்தியா-சவூதி அரேபியா
�2019இல் ரியாத்தில் வைத்து இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மேலும், இந்த சந்திப்பின் போது, மூலோபாய கூட்டாண்மை கவுன்சிலின் அரசியல், பாதுகாப்பு, சமூக-கலாச்சார ஒத்துழைப்புக் குழு மற்றும் பொருளாதாரம்-முதலீட்டு ஒத்துழைப்புக் குழு ஆகிய இரண்டு குழுக்களின் முன்னேற்றத்தை தலைவர்கள் மதிப்பிடுவார்கள். அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களையும் அவர்கள் விவாதிப்பார்கள். பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் அவர்கள் விவாதிப்பார்கள். இந்தியாவும் சவூதி அரேபியாவும் நீண்ட நெடுங்காலமாக நல்லுறவு மற்றும் நல்ல கூட்டுறவுகளை கொண்ட நாடுகளாகும். அரசாங்க தரவுகளின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2022-23 நிதியாண்டில் 52.75 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது.