ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் முழு அளவையும் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்து வரும் நிலையில், அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்ய, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார். இந்த அலோசனை கூட்டத்தின் போது, ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பாதுகாப்பு நிலவரம் குறித்து பிரதமருக்கு விரிவான பார்வை அளிக்கப்பட்டது. அப்போது காஷ்மீரில் அமைதியை மீட்டெடுக்க நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு திறன்களின் முழு அளவையும் பயன்படுத்துமாறு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
நான்கு நாட்களாக நடைபெறும் தீவிரவாத தாக்குதல்
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோருடன் பேசியதோடு, பாதுகாப்புப் படைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார். கடந்த நான்கு நாட்களாக ரியாசி, கதுவா மற்றும் தோடா மாவட்டங்களில் நான்கு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 யாத்ரீகர்கள் மற்றும் ஒரு சிஆர்பிஎஃப் ஜவான் கொல்லப்பட்டனர். அதோடு, ஏழு பாதுகாப்பு வீரர்கள் மற்றும் பலர் காயமடைந்தனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வனப் பகுதிகளில், சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளைக் கண்டறிந்து நடுநிலையாக்க பாதுகாப்புப் படையினரால் தீவிரமான தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.