விமானத்தில் கோளாறு: இந்தியாவில் சிக்கி கொண்டார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதால், அவரும் அவரது தூதுக்குழுவினரும் புது டெல்லியில் சிக்கிக்கொண்டனர். கனடா பிரதமர் ட்ரூடோ, கனேடிய அரசாங்க ஊழியர்கள் மற்றும் பிரதமருடன் பயணம் செய்யும் கனேடிய பத்திரிகையாளர்கள் ஆகியோர் ஜி20 தலைவர்களின் உச்சிமாநாட்டிற்குப் பிறகு நேற்று இரவு இந்தியாவை விட்டு வெளியேறத் தயாராகினர். ஆனால், அவர்களது விமானத்தில் திடீரென்று தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டது. அவர்கள் எப்போது, எப்படி நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. "இந்த சிக்கல்களை ஒரே இரவில் சரி செய்ய முடியாது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை எங்களின் பிரதிநிதிகள் இந்தியாவில் தங்கியிருப்பார்கள்" என்று ட்ரூடோவின் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையிலான உறவுகளில் பதட்டம்
நேற்று கனடாவின் பிரதமருடன் உரையாடல் நடத்திய பிரதமர் மோடி, சீக்கிய பிரிவினைவாத குழுக்களை கனடாவில் செயல்பட அனுமதித்ததாக கனடா மீது விமர்சனங்களை முன்வைத்தார். கனடாவில் இயங்கும் தீவிரவாத சக்திகளின் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்வது குறித்து அவர் வலுவான கவலைகளை தெரிவித்தார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதனால், ட்ரூடோவும் பிரதமர் மோடியும் உச்சிமாநாட்டின் போது முறையான இருதரப்பு சந்திப்பை நடத்தவில்லை. இந்திய சீக்கியர்களுக்கு விடுதலை வழங்கி அவர்களுக்கு தனி நாடு தர வேண்டும் என்று கோரி வரும் தீவிரவாத அமைப்பான காலிஸ்தான் குழுக்கள், கனடாவில் தீவிரமாக இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.