
ஓய்வூதியம் பெறுவோருக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு அடையாள அட்டை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு, கருவூலம் மற்றும் கணக்குத்துறை தரவுத்தளத்தில் உள்ள விவரங்கள் அனைத்தும் சேகரித்து அதற்குரியோருக்கு மருத்துவ காப்பீடுக்கான அடையாள அட்டை அளிக்கப்படுகிறது.
இதனிடையே ஓய்வூதியம் பெறும் பயனாளர்கள் தங்களது சங்கம் சார்பில் மருத்துவ காப்பீடு அடையாள அட்டையில் பயனாளி மற்றும் அவரது துணைவர் புகைப்படம் இணைக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையினை தமிழக அரசிடம் வைத்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, அவர்கள் கோரிக்கையின்படி, புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு அட்டையினை பெறுவதற்கான படிவங்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.
ஓய்வூதியம்
இணையத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
அதன் பின்னர், பயனாளிகள் தங்களுக்கான மருத்துவ காப்பீடு அடையாள அட்டையினை இணையத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாவருடம் வாழ்வு சான்றிதழினை அளிக்க நேர்காணலுக்காக கருவூல அலுவலகங்களுக்கு வரும் பயனாளிகளிடம் அலுவலர்கள் இந்த படிவத்தினை கொடுத்து பூர்த்தி செய்யுமாறு கூறி, அதனை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவினைபிறப்பித்துள்ளது.
இதனை கொண்டு ஓய்வூதியம் பெறுவோரின் விவரங்கள் திருத்தப்படுவதோடு, புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்த கடிதத்தினை தமிழக கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் கே.விஜயேந்திர பாண்டியன் அவர்கள் சென்னையில் உள்ள சம்பளம் வழங்கும் அதிகாரி, அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.