பாஜக கூட்டணியில் இருந்து விலகவில்லை - பவன் கல்யாண் விளக்கம்
செய்தி முன்னோட்டம்
ஆந்திரா மாநிலத்தில் பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியானது, கடந்த தேர்தலில் பாஜக.,தலைமையிலான என்.டி.ஏ.கூட்டணியோடு இணைந்து போட்டியிட்டது.
இதனிடையே கடந்த மாதம் ஊழல் வழக்கில் முன்னாள் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை அண்மையில் சந்தித்து ஆறுதல் கூறிய பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதாகவும், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறப்போவதாகவும் தெரிவித்துள்ளார் என்று நேற்று(அக்.,5) செய்திகள் வெளியானது.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக பரவிய தகவல்கள் உண்மையல்ல என்று ஜனசேனா கட்சி தலைவரான பவன் கல்யாண் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விளக்கம்
ஜனசேனா-தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சியினை கைப்பற்றும் - பவன் கல்யாண்
இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திரா மாநிலத்திலுள்ள கிருஷ்ணா மாவட்டம் கைகலூரில் ஓர் கூட்டத்தில் இவர் விளக்கமளித்துள்ளார்.
அதன்படி அவர், பாஜக கூட்டணியில் இருந்து ஜனசேனா கட்சி விலகவில்லை. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இவ்வாறான தவறான தகவல்களை நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்று குற்றம்சாட்டி பேசியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், 'ஒரு வேளை பாஜக கூட்டணியில் இருந்து ஜனசேனா கட்சி விலகுவதாக இருந்தால், அது குறித்த அறிவிப்பினை நானே வெளியிடுவேன்' என்றும் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து, வரவிருக்கும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடனும், ஆசியுடனும் ஜனசேனா-தெலுங்கு தேசம் கூட்டணி ஆந்திராவில் ஆட்சியினை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளார்.