
என்.டி.ஏ. கூட்டணியிலிருந்து வெளியேறிய பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி
செய்தி முன்னோட்டம்
ஆந்திரா மாநிலத்தில் பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியானது, கடந்த தேர்தலில் பாஜக.,தலைமையிலான என்.டி.ஏ.கூட்டணியோடு இணைந்து போட்டியிட்டது.
இதனிடையே கடந்த மாதம் ஊழல் வழக்கில் முன்னாள் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை அண்மையில் சந்தித்து ஆறுதல் கூறிய பவன் கல்யாண், தற்போது பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
ஆந்திரா-கிருஷ்ணா மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ஜனசேனா கட்சி.,தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் இதனை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, "தெலுங்கு தேசம் கட்சி மிகவும் வலிமையானது. ஆந்திராவின் சிறந்த மேலாண்மை மற்றும் மாநில வளர்ச்சிக்கு தெலுங்கு தேசக்கட்சி தேவைப்படுகிறது" என்று பேசியுள்ளார்.
பவன் கல்யாண்
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை மூழ்கடிக்கவே இந்த கூட்டணி - பவன் கல்யாண்
மேலும், தற்போது அக்கட்சி சிக்கலில் உள்ளதால் தாங்கள் அந்த கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், "தெலுங்கு தேச கட்சியின் தற்போதைய சூழலுக்கு ஜனசேனாவின் இளைய ரத்தம் அவசியம். தெலுங்கு தேசம் கட்சியும் ஜனசேனா கட்சியும் ஒன்றாக இணைந்தால் நிச்சயம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மூழ்கி விடும்" என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா, பாஜக உள்ளிட்ட 3 கட்சிகளும் இணைந்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினை எதிர்க்க வேண்டும் என்று முன்னதாக பவன் கல்யாண் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், இதுகுறித்து பாஜக எவ்வித பதிலும் அளிக்காத நிலையில், தற்போது என்.டி.ஏ. கூட்டணியிலிருந்து விலகுவதாக பவன் கல்யாண் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.