தனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி
சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் நேற்று(நவ.,16)ரயில்வே வாரிய உறுப்பினரான ரூப் நாராயணன் மட்டும் பயணிக்க 10 பெட்டிகள் கொண்ட ரயில் ஒன்று இயக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1000 பேர் பயணம் மேற்கொள்ளும் பாண்டியன் விரைவு ரயில் வழக்கமான நடைமேடையில் நிறுத்தப்படாமல் வேறு நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதுகுறித்து எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரயில்வே பொது மேலாளர் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சு.வெங்கடேசன் கூறியதாவது, 'மதுரை செல்வதற்காக நேற்று ரயில் நிலையம் வந்தேன். பாண்டியன் விரைவு ரயில் எப்போதும் பயணிகள் உள்ளே நுழைந்ததும் ஏற ஏதுவாக நடைமேடை-4ல் நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக பாண்டியன் விரைவு ரயில் நடைமேடை-5ல் நிறுத்தப்பட்டிருந்தது' என்று தெரிவித்தார்.
உரிய விளக்கம் அளிக்கும்படி வலியுறுத்தல்
மேலும் அவர், 'நடைமேடை மாற்றப்பட்டதால் ஏராளமான பயணிகள் அவதிஅவதியாக படிக்கெட்டுகளில் ஏறி அடுத்த நடைமேடைக்கு விரைந்து கொண்டிருந்தனர்' என்றும், '4ம்-நடைமேடையில் யாரும் ஏறாத ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது' என்றும் குறிப்பிட்டார். "இதுகுறித்து விசாரிக்கையில், ரயில்வே போர்டு உறுப்பினர் ரூப் நாராயணன் சங்கர் வந்துள்ளார். நாளை அவர் ராமேஸ்வரம் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். அவருக்காக தான் இந்த ரயில் நிற்கிறது என்று கூறினர்"என்றும், "ஒரு தனிநபர் படிக்கெட்டுகள் ஏறாமல் வசதியாக ரயிலில் எற, 1000 பயணிகள் அலைக்கழிக்கப்பட்டது மிகப்பெரிய கொடுமை. இதற்கு தெற்கு ரயில்வே மேலாளர் பொறுப்பெடுத்து உரிய விளக்கமளிக்கவேண்டும்"என்றும் சு.வெங்கடேசன் ஆவேசமாக பேசியுள்ளார். எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் மக்களாட்சியின் ஜனநாயகத்தை மீறும் உரிமை யாருக்கும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.