மீண்டும் நாளை கூடுகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்; அரசுக்கு எதிராக அனல் கிளப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2025இன் இரண்டாவது அமர்வு திங்கட்கிழமை (மார்ச் 10) மீண்டும் தொடங்க உள்ளது.
இந்நிலையில், டூப்ளிகேட் தேர்தல் புகைப்பட அடையாள அட்டை எண்கள் மற்றும் மணிப்பூரில் புதிய வன்முறை உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக அனல் கிளப்ப தயாராகி வருகின்றன.
டூப்ளிகேட் வாக்காளர் அட்டை எண்கள் குறித்து கவலைகளை எழுப்புவதில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது.
இருப்பினும், வாக்காளர் பட்டியல் மோசடி குறித்த திரிணாமுல் கட்சியின் கூற்றுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
சில வாக்காளர் அட்டை எண்கள் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால் மக்கள்தொகை தகவல் மற்றும் வாக்குச் சாவடிகள் போன்ற பிற விவரங்கள் வேறுபட்டவை என்று கூறியது.
ஆதரவு
திரிணாமுல் காங்கிரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு
காங்கிரஸ், திமுக, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்தப் பிரச்சினையை வலியுறுத்துவதில் திரிணாமுல் காங்கிரஸ் உடன் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக, டிரம்ப் நிர்வாகத்தை இந்தியா கையாளும் விதமும் சர்ச்சைக்குரியதாக இருக்கும்.
இதற்கிடையில், மணிப்பூர் பட்ஜெட் உள்ளிட்ட பட்ஜெட் ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் பெறுவதே அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கும்.
ஏனெனில், மணிப்பூர் தற்போது ஜனாதிபதி ஆட்சியின் கீழ் உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதன் ஒப்புதலுக்காக ஒரு சட்டப்பூர்வ தீர்மானத்தை முன்மொழிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்களன்று மணிப்பூருக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இதற்கிடையே, வக்ஃப் திருத்த மசோதா அரசாங்கத்தின் முக்கிய கவனம் செலுத்தும் ஒன்றாகும்.