விமானத்தை தகர்க்கப் போவதாக காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: உளவுத்துறை
கனடாவைச் சேர்ந்த காலிஸ்தானி அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி (SFJ) தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன், நவம்பர் 19ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தை வெடிக்கச் செய்வதாக விடுத்த எச்சரிக்கையை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி நியூஸ்18 தெரிவித்துள்ளது. அவர் இந்தியாவிற்கு எதிராக இளைஞர்களை மூளைச்சலவை செய்ய முயற்சிப்பதாகவும், 1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியாவின் கனிஷ்கா விமானத்தில் 329 பேரைக் கொன்ற குண்டுவெடிப்பை மீண்டும் செய்யப்போவதாக அச்சுறுத்துவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. ஏர் இந்தியா விமானங்கள் இயங்கும் அனைத்து முக்கிய நகரங்களிலும் அதிகாரிகளும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் தேடப்படும் காலிஸ்தானி பிரிவினைவாதிகளின் பட்டியலில், நியமிக்கப்பட்ட பயங்கரவாதியான பன்னுன் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
பன்னூன் விடுத்த எச்சரிக்கை என்ன?
ஜூன் மாதம், கனேடிய மண்ணில் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் கசந்த பிறகு,செப்டம்பரில், பன்னூன் இந்தியாவில் 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை சீர்குலைக்க போவதாக அச்சுறுத்தினான். அதை தொடர்ந்து, உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் நாளான நவம்பர் 19 அன்று சீக்கியர்களை ஏர் இந்தியா விமானத்தில் பறக்கவிடக்கூடாது என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், பனூனால் எதையும் செய்ய முடியாது என்று உளவுத்துறை அதிகாரிகள் நம்பினாலும், அவன் இந்தியாவிற்கு எதிராக இளைஞர்களை திசை திரும்புவதாக பலமாக சந்தேகிக்கப்படுவதாக அறிக்கை கூறியது. சமீபத்திய அச்சுறுத்தலை தொடர்ந்து, அவன் விமானத்தை கடத்தி, பணயக்கைதிகள் வைத்து கோரிக்கை எழுப்பக்கூடும் எனவும் சந்தேகப்படுகிறது உளவுத்துறை.
இதற்கு முன்னரும் அரங்கேறிய கடத்தல் நாடகம்
1980 களின் முற்பகுதியில் சீக்கிய போராளிகள் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களை ஐந்து முறை கடத்தியதாக கூறப்படுகிறது. அதில் குறைந்தது இரண்டு, 1981 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடையது மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட பயங்கரவாதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்த பயன்படுத்தப்பட்டது. 1984 ஆம் ஆண்டு, இந்தியாவில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை மேற்கோள் காட்டி , வான்கூவரில் இருந்து லண்டன் வரையிலான ஏர் இந்தியாவின் "உலகளாவிய முற்றுகைக்கு" பன்னுன் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளான நவம்பர் 19ஆம் தேதி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை மூட இந்திய அரசை அவர் கோரியதாக கூறப்படுகிறது.