மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா
மணிப்பூரில் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை ஒப்படைக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(ஜூன் 1) எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநிலத்தில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மணிப்பூர் வன்முறையை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மணிப்பூரில் நடந்த இனக்கலவரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்படும் என்று அமித்ஷா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், ஆளுநர், பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களின் கீழ் அமைதிக் குழு ஒன்றும் அமைக்கப்பட இருக்கிறது. வன்முறை தொடர்பான 6 வழக்குகள் மத்திய புலனாய்வுப் பிரிவால்(சிபிஐ) விசாரிக்கப்படும்.
ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமித்ஷா
"மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, சிபிஐ விசாரணை நடத்தும். விசாரணை நடுநிலையாக இருக்கும் என்றும், வன்முறைக்குப் பின்னால் உள்ள காரணங்கள் கண்டறியப்படும் என்றும் நான் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்" என்று அமித்ஷா கூறியுள்ளார். பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து ஆயுதங்களை கொள்ளையடித்த தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். "ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று அவர் கூறியுள்ளார். மணிப்பூர் இனக்கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், "டிபிடி(நேரடி பயன் பரிமாற்றம்) மூலம் அந்த இழப்பீடு வழங்கப்படும்" என்று அமித்ஷா கூறி இருக்கிறார்.