LOADING...
111 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலம் அகற்றம்: இந்திய ரயில்வே டெண்டர் வெளியிட்டது
111 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலம் அகற்றப்படவுள்ளது

111 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலம் அகற்றம்: இந்திய ரயில்வே டெண்டர் வெளியிட்டது

எழுதியவர் Sekar Chinnappan
Aug 23, 2025
05:27 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முதல் கடல் பாலமான, 111 ஆண்டுகள் பழமையான ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தை அகற்றுவதற்கான டெண்டரை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. 1914 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பொறியாளர்களால் கட்டப்பட்டு, திறக்கப்பட்ட இந்தப் பாலம், ராமேஸ்வரம் தீவை இந்திய நிலப்பரப்புடன் இணைக்கும் ஒரு முக்கிய அடையாளமாக இருந்து வந்தது. சுமார் 2.3 கிமீ நீளமுள்ள இந்த ரயில் பாலம், கப்பல்கள் கடந்து செல்வதற்காக நடுவில் திறக்கும் சிறப்பு வசதியைக் கொண்டிருந்தது. மும்பையில் உள்ள பாந்திரா-வொர்லி கடற்பாலம் 2010 ஆம் ஆண்டு திறக்கப்படும் வரை, இதுவே இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாக இருந்தது.

புதிய பாலம்

பாம்பனில் புதிய பாலம் திறப்பு

இந்தப் பழைய பாலத்திற்கு மாற்றாக, நவீன வசதிகளுடன் கூடிய புதிய பாம்பன் பாலம் கட்டும் திட்டம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய பாலம், கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்டது. முற்றிலும் மின்மயமாக்கப்பட்ட இந்த புதிய பாலம், மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, செங்குத்தாக திறக்கப்படும் தூக்கு பகுதி (vertical lift section) இதில் அமைந்துள்ளது, இது பெரிய கப்பல்களும் எளிதாகக் கடந்து செல்ல உதவும். புதிய பாலம் செயல்பாட்டிற்கு வந்த நிலையில், பழைய பாலத்தை இடித்து அகற்ற தனியார் நிறுவனங்களுக்கான டெண்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நூறாண்டுகளுக்கும் மேலாக, பல புயல்களையும், இயற்கைச் சீற்றங்களையும் கடந்து கம்பீரமாக நின்ற இந்தப் பாலம், நம்மிடமிருந்து விடைபெற உள்ளது.