பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ்
இரு தினங்களுக்கு முன்னர், பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில், குற்றவாளிகளை கைது செய்யும் வரை, உடலை பெற மாட்டோம் என, இறந்தவர்களின் உறவினர்கள் இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்த திருப்பூர் காவல்துறை, செல்லமுத்து என்பவரை நேற்று கைது செய்தது. ஆனால், கைதில் இருந்து தப்பிக்கும் நோக்கோடு, அவர் மாடியிலிருந்து தப்பிக்க யத்தனித்ததால், அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மீட்பு
செல்லமுத்துவிடம் விசாரணை செய்ததில், கொலைக்கு பயன்படுத்திய அருவாள் மீட்கப்பட்டதாகவும் கூறியது காவல்துறை. இதை தொடர்ந்து, சோனை முத்தையா என்பவரையும் கைது செய்து, விசாரித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், வெங்கடேசன் என்பவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில், காவல்துறையினர் முகாமிட்டு, வெங்கடேசனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். குற்றவாளி வெங்கடேசனின் செல்போன் சிக்னல், கடைசியாக நெல்லை மாவட்டத்தில் காட்டியதாகவும், அதனால், அவர் அந்த ஏரியாவில் பதுங்கியிருக்கலாம் என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதனை தொடர்ந்து, அங்கிருந்து பெறப்பட்ட CCTV பதிவு ஒன்றில், வெங்கடேசன் முகம் பதிவாகியுள்ளதெனவும் கூறியுள்ளனர், காவல்துறையினர். இதனால், கொலையாளியை நெருங்கி விட்டதாகவும், விரைவில் கைது செய்யப்படுவான் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.