பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம் - திண்டுக்கல் முழுவதும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேக திருவிழா நடைபெறவுள்ளது. இதனையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு 2023ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இறுதியாக கடந்த 2006ம் ஆண்டு பழனி முருகர் கோயிலில் கும்பாபிஷேக திருவிழா நடத்தப்பட்டது என்பது குறிப்பிடவேண்டியவை. இதனை முன்னிட்டு தமிழக அரசு 27ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
பக்தர்களுக்காண அடிப்படை வசதிகள்-முன்னேற்பாடுகள் தீவிரம்
பழனி சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி என்று கூறப்படுகிறது. பழனி முருகர் சிலை போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது என்று புராண கதைகள் கூறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலாக போற்றப்படும் இதன் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற பல்வேறு ஏற்பாடுகளும், நடவடிக்கைகளும் கோயில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் கலந்துகொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுள் 2 ஆயிரம் பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் அன்றைய தினம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, போக்குவரத்துக்கான சிறப்பு பேருந்து வசதிகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவற்றிற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.