பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில், மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனி சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி என்று கூறப்படுகிறது. பழனி முருகர் சிலை போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. ஞானப்பழம் அடைய நடந்த போட்டியில், பிள்ளையாருடன் தோற்ற கோபத்தில் பழனியில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார் என்று புராண கதைகள் கூறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலாக போற்றப்படும் இதன் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற பல்வேறு ஏற்பாடுகளும், நடவடிக்கைகளும் கோயில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக அதிகாரிகளோடு ஆலோசனை கூட்டம் நடந்தது.
கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டம்
நடந்து முடிந்த ஆலோசனை கூட்டத்தில், கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், இதற்கு கோயில் நிர்வாக இணையத்தளம் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரோப் கார் மற்றும் விஞ்ச் வழியாக 2 ஆயிரம் பேரும், படிவழி பாதையில் 4 ஆயிரம் பேர் என மொத்தம் 6 ஆயிரம் பேருக்கு அனுமதி என்று கூறப்பட்டுள்ளது. மேலும் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள குலுக்கல் முறையில் 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பழனி முருகன் குடமுழுக்கு விழா காலை 8மணி முதல் 9.30வரை நடைபெறும், பக்தர்கள் காலை 4முதல் 8மணிக்குள் மலை கோயிலுக்குள் சென்றுவிட வேண்டும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.