தஞ்சாவூரில் ஆருத்ரா தரிசனம் - பெரிய கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை
மார்கழி திருவாதை நாளில் விரதமிருந்து சிவனை வழிபட்டு ஆருத்ரா தரிசனத்தை கண்டால் சகலவித சுகபோகங்களும் கிடைத்து, பிறவி பிணி நீங்க பெறுவார்கள் என்பது ஐதீகம். திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட மகாவிஷ்ணு தன் நிலை மறந்து ஆனந்தத்தில் திளைத்திருப்பதை கண்ட ஆதிசேஷன், அது குறித்து விஷ்ணுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு தாருகாவனத்தில் சிவன் ஆடிய அற்புத நடனம் குறித்து விஷ்ணு சொல்லியுள்ளார். ஈசன் நடனத்தை காண ஆர்வம் கொண்ட ஆதிசேஷன், பாதி மனிதன், பாதி பாம்பாக பூவுலகில் தோன்றி தவம் இருந்தார். அவரது தவத்தில் ஆனந்தமடைந்த ஈசன், சிதம்பரத்தில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் மீண்டும் அந்த நடனத்தை ஆடி காண்பித்துள்ளார். இந்த நாள் தான் ஆருத்ரா தரிசன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தஞ்சை பெரிய கோயிலில் ஐம்பொன்னாலான நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள்
ஆருத்ரா தரிசன நாளையொட்டி இன்று காலை தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இன்று மதியம் 2.30 மணியளவில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தஞ்சையில் ஆண்டுதோறும் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்று ஐம்பொன்னாலான நடராஜருக்கு விபூதி, பழங்கள், சந்தனம் உள்ளிட்ட பல மங்கள பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்தோடு பார்த்து சென்றனர். இதே போல், ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில், கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில், நெல்லையப்பர் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.