ஜம்மு காஷ்மீர் பேருந்து தாக்குதலுக்கு பொறுப்பேற்றது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு
நேற்று ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்(TRF) என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நேற்று அந்த பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 33 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற TRF, இது வெறும் ஆரம்பம் மாட்டும் தான் என்றும், இனி "சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் அல்லாதவர்கள்" மீது இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில், தீவிரவாதிகளை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நியமிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்தின் அடிவார முகாமான கத்ராவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷிவ் கோரி கோவிலில் இருந்து அந்த பேருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. அருகில் உள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், ஒரு வாகனத்தில் பதுங்கி இருந்து பேருந்தில் இருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டனர். அந்த பேருந்தின் ஓட்டுநர் தோட்டாவால் தாக்கப்பட்டு சமநிலையை இழந்ததால் அந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதனால், பேருந்தில் இருந்து 10 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர்.