வழக்கை திரும்ப பெற மறுத்ததால் சிறுமியின் வீட்டிற்கு தீ வைத்த பலாத்கார குற்றவாளி
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு, 11 வயதுடைய தலித் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருவர் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த அந்த இரு குற்றவாளிகளும் சேர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் இரு குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். அந்த இரு குழந்தைகளில் ஒன்று, பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் குழந்தையாகும். கடந்த ஆண்டு, பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் அந்த சிறுமிக்கு 6 மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. பாலியல் பலாத்காரக் குற்றவாளிகள் இருவரும், சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கைக்குழந்தையை கொல்வதற்காகவே தீ வைக்கப்பட்டது: சிறுமியின் தாயார்
இந்நிலையில், நேற்று மாலை பாதிக்கப்பட்ட சிறுமியின் ஓலை குடிசைக்குள் 5 பேருடன் நுழைந்த குற்றவாளிகள், பாதிக்கப்பட்ட சிறுமி வழக்கைத் திரும்பப் பெற மறுத்ததை அடுத்து, அவரது வீட்டிற்கு தீ வைத்தனர். இந்த தீ விபத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குழந்தைக்கு 35 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டது. மேலும், அந்த சிறுமியின் சகோதரிக்கு 45 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 13, 2022 அன்று அந்த தலித் சிறுமி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அதே ஆண்டு செப்டம்பர் மாதம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த அந்த கைக்குழந்தையை கொல்வதற்காகவே அவர்களது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.