இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் கோவில் கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 36 பேரில் 8 பேரின் குடும்பத்தினர் உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். பெலேஷ்வர் மகாதேவ் கோவில் கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் உயிரிழந்த தங்களின் அன்புக்குரியவர்களின் தோல் மற்றும் கண்களை தானமாக வழங்க அவர்களது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதாக தன்னார்வ தொண்டு நிறுவனமான முஸ்கான் குழுமம் தெரிவித்துள்ளது. "கனத்த இதயத்துடன், துக்கத்தில் இருந்த குடும்பத்தினர், இறந்த தங்கள் குடும்ப உறுப்பினரின் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் அளித்தனர்." என்று அந்த அமைப்பை சேர்நத சந்தீபன் ஆர்யா தெரிவித்தார்.
கண் மற்றும் தோல் தானம் செய்யப்பட்டுள்ளது
"இதுவரை, இந்திர குமார், பூமிகா கான்சந்தனி, ஜெயந்தி பாய், தக்ஷ் படேல், லக்ஷ்மி படேல், பாரதி குக்ரேஜா, இந்தார் சந்த்கி மற்றும் கனக் படேல் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் கண் மற்றும் தோல் தானம் செய்வதற்கு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளனர்." என்று மேலும் அவர் கூறினார். அவர்களது கண்கள் MY மருத்துவமனை மற்றும் சங்கரா கண் வங்கிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. சோய்த்ராம் மருத்துவமனை அதிகாரிகள் தோலை தானமாக பெற்றுள்ளனர். "உடல் உறுப்பு தானத்தில் பணியாற்றும் தன்னார்வ அமைப்பான முஸ்கான் குழுமத்தின் கோரிக்கை கிடைத்தது. அதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு தேவையான ஆதரவுகளை வழங்கியது." என்று இந்தூரின் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் அஜய்தியோ சர்மா தெரிவித்திருக்கிறார்.