இந்தூர் கோவில் கிணறு இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 35ஆக உயர்வு
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருக்கும் ஒரு கோயிலில் உள்ள படிக்கட்டுக் கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 35 பேர் உயிரிழந்தனர். பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் உள்ள கிணறு, ராம நவமி அன்று மக்கள் கூட்டத்தின் எடையைத் தாங்க முடியாமல் இடிந்து விழுந்தது. "மொத்தம் 35 பேர் உயிரிழந்தனர். ஒருவரை காணவில்லை. 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்குப் பின் 2 பேர் பத்திரமாக வீடு திரும்பினர். காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது." என்று இந்தூர் கலெக்டர் டி.இளையராஜா கூறியுள்ளார். "வியாழன் மதியம் 12:30 மணியளவில் 18 மணிநேர மீட்புப் பணி தொடங்கியது. அது இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
தனியார் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் இந்த கோவில், இந்தூரில் உள்ள பழமையான குடியிருப்பு காலனிகளில் ஒன்றான ஸ்னே நகரில் அமைந்துள்ளது. ராம நவமி அன்று, கோயிலின் மேடையாகவும் கிணற்றின் மேற் கூரையாகவும் செயல்படும் கான்கிரீட் ஸ்லாப்பில் ஹவானி நடத்தப்பட்டது. 30-40 பேர் எடையை தாங்கும் அளவுக்கு அந்த கான்கிரீட் ஸ்லாப் வலுவாக இல்லாததால், 40 அடி ஆழமுள்ள படிக்கட்டு கிணற்றில் பக்தர்கள் தவறி விழுந்தனர். பெலேஷ்வர் மகாதேவ் கோவில், நான்கு தசாப்தங்களுக்கு முன்பு படிக்கட்டுக் கிணற்றுக்கு மேல் கட்டப்பட்டது. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.