கூட்டணி கட்சிகளின் மாநிலங்களுக்கு மட்டும் பாஜக அரசு சலுகைகளை அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றசாட்டு
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் 2024ஐ தாக்கல் செய்தார். இந்த வருட பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் சலுகைகளும் நிதியுதவிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஏழைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) போன்ற என்டிஏ கூட்டாளிகளுக்கு மட்டும் பாஜக அரசு முன்னுரிமை அளித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. NDA அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இது அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதற்கான பட்ஜெட் என்று கூறியுள்ளார்.
'மேற்கு வங்காளம் என்ன தவறு செய்தது': மம்தா பானர்ஜி கேள்வி
பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கான சிறப்புத் திட்டங்களைக் குறிப்பிட்டு பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், 2024ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் ஒரு வழியாகும் என்று குற்றம்சாட்டியுள்ளார். பீகாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கான சிறப்பு நிதியுதவி ஆகியவை இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மத்திய பட்ஜெட், அரசியல் சார்புடையது என்றும் ஏழைகளுக்கு எதிரானது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்காளம் என்ன தவறு செய்தது என்று மத்திய அரசு தங்கள் மாநிலத்தை தவிக்கவிட்டுவிட்டது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது திசையற்றது மற்றும் தொலைநோக்கு பார்வையற்றது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.