பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு
கர்நாடக மாநிலம் பெங்களூரில் வரும் 13ஆம் தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற இருப்பதால், பாஜகவை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணியின் வெளிப்பாடாக கடந்த 23ஆம் தேதி பீகாரில் வைத்து அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஒரு எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடருக்கு பிறகு நடத்தப்படும்
மேலும், இந்த கூட்டத்தில் 17க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில், அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம் வரும் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் கர்நாட்க மாநிலம் பெங்களூரில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கிடையில், கர்நாடக மற்றும் பீகார் சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற இருப்பதால், அறிவிக்கப்பட்ட தேதியில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறாது என்று பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் கே.சி.தியாகி அறிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்ட இந்த கூட்டம் சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடருக்கு பிறகு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா அரசியலின் மிக முக்கிய எதிர்க்கட்சியான தேசிவாத காங்கிரஸ் கட்சியில் பிளவுபட்டிருக்கும் நிலையில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.