அஜித் பவாருக்கு எதிராக தகுதி நீக்க மனுவை தாக்கல் செய்தது NCP
நேற்று மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவாருக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சி(NCP) தகுதி நீக்க மனுக்களை தாக்கல் செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவின் மிக முக்கிய எதிர் கட்சியாகும். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சரத் பவாரும் அஜித் பவாரும் அக்கட்சியின் மிக முக்கிய தலைவர்கள் ஆவர். அவர்கள் இருவரும் அரசியல் தலைவர்கள் எனபதையும் தாண்டி மிக நெருங்கிய உறவினர்களும் கூட. இந்நிலையில், சரத் பவாரின் மருமகனான அஜித் பவார், நேற்று திடீரென்று ஆளும் பாஜக அரசுடன் இணைந்தார். இந்த விஷயம் சரத் பவாருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிற தலைவர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தகுதி நீக்க மனுக்கள் மாநில சட்டப்பேரவைக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது
நேற்று 8 NCP எம்எல்ஏக்களுடன் பாஜக அரசுடன் கைகோர்த்த அஜித் பவார், மகாராஷ்டிராவின் துணை முதல்வர்களாக பதவியேற்றார். அவருடன் வந்த 8 NCP எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. 1999ஆம் ஆண்டு சரத் பவாரால் ஆரம்பிக்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டிருக்கும் இந்த மிகப்பெரும் பிளவால் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், NCP தலைவரான ஜெயந்த் பாட்டீல், பாஜக கூட்டணி அரசில் அமைச்சர்களாகப் பதவியேற்ற அஜித் பவார் மற்றும் 8 பேருக்கு எதிராக தகுதிநீக்க மனுக்களை NCP தாக்கல் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். "ஒன்பது எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்களை மாநில சட்டப்பேரவைக்கு அஞ்சல் மூலம் NCP அனுப்பியுள்ளது." என்று அவர் கூறியுள்ளார்.