பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்: சீறி எழும் இந்தியா
மாலத்தீவு நாட்டின் அமைச்சர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மாலத்தீவின் 'இளைஞர் அதிகாரமளித்தல்' துணை அமைச்சர் மரியம் ஷியுனா, ஒரு ட்விட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியை "கோமாளி" என்றும், "பொம்மலாட்ட பொம்மை" என்றும் அழைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகு, அவர் அந்த ட்விட்டர் பதிவை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி தனது லட்சத்தீவு பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை சமீபத்தில் வெளியிட்டு, அந்த தீவை இந்தியர்களுக்கான சுற்றுலா தலமாக அறிவித்தார். அந்த பதிவு குறித்து பேசிய துணை அமைச்சர் மரியம் ஷியுனா, லட்சத்தீவையும் மாலத்தீவையும் ஒப்பிட்டு பேசி பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசி இருந்தார்.
லட்சத்தீவையும் பிரதமர் மோடியையும் கேலி செய்த மாலத்தீவு அதிகாரிகள்
அவரை தவிர, எம்.பி. ஜாஹித் ரமீஸ் உள்ளிட்ட மாலத்தீவு அதிகாரிகள், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை கேலி செய்து பதிவிட்டிருந்தனர். "இந்த நடவடிக்கை சிறப்பானது. ஆனால், எங்களுடன் போட்டியிடும் எண்ணம் மாயையானது. நாங்கள் வழங்கும் சேவையை அவர்களால் எப்படி வழங்க முடியும்? அவர்கள் எப்படி சுத்தமாக வைத்திருப்பார்களோ? அறைகளில் இருந்து வரும் நாற்றம் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும்." என்று ஜாஹித் ரமீஸ் கூறி இருந்தார். இந்நிலையில், இணையவாசிகள் பலர் மாலத்தீவு அதிகாரிகளின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பலர் "மாலத்தீவை புறக்கணிக்க" அழைப்பு விடுத்தனர். இதற்கிடையில், மாலத்தீவுக்கான இந்திய தூதர், அந்நாட்டின் அரசாங்கத்தை தொடர்பு கொண்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிக்கையை வெளியிட்டது மாலத்தீவு அரசாங்கம்
இந்நிலையில், இந்த பிரச்சனை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கும் மாலத்தீவு அரசாங்கம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அந்நாட்டு அமைச்சர் கூறிய இழிவான கருத்துக்களை நிராகரித்ததுடன், அவர் கூறியது மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துக்கள் இல்லை என்றும், அது மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளது. "வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் உயர்மட்ட நபர்களுக்கு எதிராக சமூக ஊடக தளங்களில் தரக்குறைவான கருத்துகள் பரப்பப்படுகின்றன என்பது மாலத்தீவு அரசாங்கத்திற்கு தெரியும். ஆனால், அந்த கருத்துக்கள் தனிப்பட்டவை மற்றும் மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை" என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் மாலத்தீவு அரசாங்கம் கூறியுள்ளது. மேலும், இப்படிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கும் நபர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாலத்தீவு அரசாங்கம் தெரிவித்துள்ளது.