ராஞ்சியில் இன்று திறந்தவெளி வண்ணத்துப்பூச்சி பூங்கா துவங்கப்பட்டது
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் திறந்தவெளி வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று(நவ.,7) துவங்கி வைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு அருகில் அமைந்துள்ளது பக்வான் பிர்சா உயிரியல் பூங்கா.
அந்த பூங்காவில் தற்போது வண்ணத்துப்பூச்சிகளுக்கு என தனியாக திறந்தவெளியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஓர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இதனை வனத்துறை கூடுதல் செயலாளர் எல்.கியாங்க்ட் இன்று பார்வையாளர்களுக்கு திறந்து வைத்தார்.
அதன்படி இந்த பூங்காவில் 88 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்களை காண முடியும் என்று கூறப்படுகிறது.
மேலும் இது கிழக்கு இநதியாவிலேயே மிக பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா என்றும் கூறப்படுகிறது.
பூங்கா
பராமரிப்பு பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம்
இந்த பூங்காவில் சாதாரண லியோபார்ட் வண்ணத்து பூச்சி இனம் முதல் மிகவும் அரியவகையான 'நீல பென்சி' என்று அழைக்கப்படும் வண்ணத்துப்பூச்சிகளின் இனம் வரை நம்மால் பார்க்க முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
தற்போதைய உலக சூழலியலில் வண்ணத்துப்பூச்சிகளின் முக்கியத்துவம் குறித்து இப்பூங்கா எடுத்துரைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
தொடர்ந்து இந்த பூங்கா பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இல்லாமல் வண்ணத்துப்பூச்சிகள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதோடு அதற்கான தேன் செடிகளும் வைக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்களுக்கான நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவிற்கான பராமரிப்பு பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.