உம்மன் சாண்டி மறைவு: மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி, ராகுல் காந்தி நேரில் அஞ்சலி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, முன்னாள் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் பிரமுகரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி(79) இன்று(ஜூலை 18) அதிகாலை காலமானார். பெங்களூர் சின்மயா மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்ததை அடுத்து, கேரள அரசு இரண்டு நாட்கள் பொது துக்கத்தை அறிவித்திருக்கிறது. மேலும், கேரளாவை சேர்ந்த மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் இன்று திட்டமிடப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைத்துள்ளது
வரும் வியாழக்கிழமை இறுதி சடங்குகள் நடத்தப்படும்
காங்கிரஸ். திமுக உட்பட பிற எதிர்க்கட்சி தலைவர்கள் மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று பெங்களூரில் கூடியுள்ளனர். முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலும் பெங்களூரில் தான் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைக்கு அவரது உடல் கர்நாடக அமைச்சர் ஜான் வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, அவரது உடல் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அவரது சொந்த வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு, வரும் வியாழக்கிழமை இறுதி சடங்குகள் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதலவர் டிகே சிவகுமார் ஆகியோரும் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.