கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் காலமானார்
கேரளா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி, இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 79 . உம்மன் சாண்டி, கேரளா காங்கிரஸ் கட்சியின் முதலைமைச்சர் வேட்பாளராக இரண்டு முறை மாநிலத்தை ஆட்சி செய்துள்ளார். 1970 முதல் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதியில், 52 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து எம்.எல்.ஏவாக இருந்தார். தீவிரமான காங்கிரஸ் கட்சிக்காரராக அறியப்பட்ட உம்மன் சாண்டி, உடல்நலக்குறைவால், அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். உம்மன் சாண்டிக்கு தொண்டை புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, இதற்காக சில மாதங்களுக்கு முன் ஜெர்மனிக்கு சென்று சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சி தலைவர் சோனியா காந்தி நேரில் அஞ்சலி?
வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்த பின்பும், அவரது உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டதால், பெங்களூருவில் உள்ள சின்மயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல், இன்று அதிகாலை 4.30 மணியளவில் உம்மன் சாண்டியின் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சி கூட்டம் பெங்களுருவில் நடைபெற்று வருகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய தலைவர்களும், பெங்களுருவில் முகாமிட்டுள்ளனர். உம்மன் சாண்டி மரணம் அடைந்ததை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர், நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.