சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவக்கம்
கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அம்மாநில பக்தர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதற்காக பலரும் கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள துவங்குவர். இதன்படி கடந்த 16ம் தேதியே சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது. அன்றில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அங்கு அலை மோத துவங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். நேற்று(நவ.,19) மட்டுமே 45 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
பாதுகாப்பு பணியில் 13 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபாடு
ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், முன்பதிவு செய்யாத பக்தர்களுக்காக பிரத்யேகமாக நிலக்கல்லில் உடனடியாக முன்பதிவு செய்யும் 13 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முன்பதிவு மையங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறவுள்ள மண்டல கால பூஜைக்கு இன்று(நவ.,20)முதல் https://sabarimalaonline.org என்னும் இணையத்தளம் மூலம் முன்பதிவு செய்ய ஆன்லைன் முன்பதிவு துவங்கியுள்ளது என்று தேவசம் போர்டு மூலம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே போல் முதியவர்கள் மற்றும் சிறுவர்-சிறுமியர்களுக்கு கோயில் நிர்வாகம் மூலம் சிறப்பு தரிசன வசதிகள் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 13 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், பக்தர்கள் வசதிக்காக பார்க்கிங் வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளது.