மும்பை கடல் பகுதியில் புதிய கண்டுபிடிப்புகள்.. அறிவித்தது ONGC!
மும்பை கடல் பகுதியில் இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் இருப்பு கண்டறியப்பட்டுள்ளாதக அறிவித்திருக்கிறது மத்திய அரசு நிறுவனமான ONGC (Oil and Natural Gas Corporation). OALP (Open Acreage Licensing Policy) திட்டத்தின் கீழ் மும்பை கடல் பகுதியில் இரண்டு தொகுதிகளை ஏலத்தில் எடுத்தது ONGC. மும்பை நிலப்பரப்பில் இருந்து கடல் பகுதியில் 100 கிமீ தொலைவில் 725 சதுர கிமீ பரப்பளவு கொண்டிருக்கும் அம்ரித் தொகுதியையும், நிலப்பரப்பில் இருந்து கடல் பகுதியில் 30 கீமீ தொலைவில் 4,668 கிமீ பரப்பளவு கொண்ட மூங்கா தொகுதியையும் OALP ஏலத்தின் முதல் மற்றும் மூன்றாவது சுற்றுகளில் ஏலம் எடுத்தது ONGC.
இந்தியா இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்கும்:
OALP திட்டத்தின் கீழ் ஆராயப்பட்ட தகவல்கள் அடிப்படையில் குறிப்பிட்ட நிலப்பரப்பை நிறுவனங்கள் ஏலத்தில் எடுக்க அனுமதிக்கப்படுகின்றன. இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் இந்தியா பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கண்டுபிடிப்புகள் இந்தியாவில் உள்நாட்டு ஹைட்ரோகார்பன் உற்பத்தியைப் பெருக்கவும் வழி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இரண்டு இடங்களிலும் எந்த அளவு ஹைட்ரோகார்பன் வளம் இருக்கிறது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.