இரவுநேர பணிபுரியும் மூன்றில் ஒரு பகுதி மருத்துவர்களுக்கு பாதுகாப்பின்மை; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள மருத்துவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள், தங்கள் இரவுப் பணிகளின் போது பாதுகாப்பற்றவர்களாக அல்லது மிகவும் பாதுகாப்பற்றவர்களாக உணர்வதாக தெரிய வந்துள்ளது. இந்த பாதுகாப்பற்ற தன்மையால் சிலர் சொந்தமாக ஆயுதங்களைக் கொண்டிருக்க வேண்டும் என நினைப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 45 சதவீத மருத்துவர்களுக்கு இரவுப் பணியின் போது பணிபுரியும் அறை இல்லை என்று கணக்கெடுப்பை நடத்தி இந்திய மருத்துவச் சங்கம் அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததன் பின்னணியில், மருத்துவர்களிடையே இரவு ஷிப்டுகளின் போது ஏற்படும் பாதுகாப்புக் கவலைகள் குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3,885 மருத்துவர்களிடம் ஆய்வு
3,885 மருத்துவர்களிடம் இருந்து பெறப்பட்ட தனிப்பட்ட பதில்களுடன், இந்தியாவில் மருத்துவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஆய்வு இது என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கேரள மாநில ஐஎம்ஏவின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் மற்றும் அவரது குழுவினரால் தொகுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள், ஐஎம்ஏவின் கேரளா மெடிக்கல் ஜர்னல் அக்டோபர் 2024 இதழில் வெளியிட ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பதிலளித்தவர்கள் 22 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், அவர்களில் 85 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள், 61 சதவீதம் பேர் பயிற்சி அல்லது முதுகலை பயிற்சி பெற்றவர்கள் ஆவர். குறிப்பாக, இந்த ஆய்வில் 20-30 வயதுடைய மருத்துவர்கள் மிகக் குறைந்த பாதுகாப்பு உணர்வைக் கொண்டிருந்தனர் மற்றும் இதில் பெரும்பாலும் பயிற்சியாளர்கள் மற்றும் முதுகலை பட்டதாரிகளே உள்ளனர்.