சென்னை பேருந்தில் செல்லும் ஒருவருக்கு கொரோனா இருந்தால் அது 9 பேரை பாதிக்கும்
ஓரளவு கூட்டம் உள்ள சென்னை பேருந்தில் பயணிக்கும் போது, ஒரு பயணிக்கு கொரோனா இருந்தாலும் அதனால் 9 பேர் வரை பாதிக்கப்படலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரியை தளமாகக் கொண்ட ICMRவெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட எத்தனை பயணிகள் பேருந்தில் இருக்கிறார்கள், பேருந்து எந்த அளவு கூட்டமாக இருக்கிறது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பயணி எவ்வளவு தூரம் பயணிக்கிறார் என்பதை பொறுத்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, அறிவியல் இதழான வைரஸ் டிசீஸில் (முன்னர், இந்தியன் ஜர்னல் ஆஃப் வைராலஜி என்று அறியப்பட்டது) வெளியிடப்பட்டுள்ளது.
தாம்பரம்-பிராட்வே பேருந்து வழியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வு
விஞ்ஞானிகள் கொரோனா தொற்று சூழ்நிலையை உருவகப்படுத்த, 21-ஜி தாம்பரம் முதல் பிராட்வே பேருந்து வழியைப் பயன்படுத்தி இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இந்த 36.1 கிலோமீட்டர் பாதையில் உள்ள 40 நிறுத்தங்களில் ஒவ்வொன்றிலும் ஐந்து பயணிகள் ஏறுவார்கள் என்ற கணக்கின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. குறைந்தது ஒரு பயணி SARS-CoV-2ஆல் பாதிக்கப்பட்டிருப்பதாக கருதப்பட்டது. "தாம்பரத்திலிருந்து பிராட்வே வரையிலான ஒவ்வொரு பயணத்தின் போதும் இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை, பேருந்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஐந்து முதல் ஒன்பதாக மாறுபடும்" என்று இந்த ஆய்வின் இணை ஆசிரியர் கமலானந்த் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். "தொற்றுநோய் அபாயத்தைக் குறைக்க மக்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.