ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
பண்டிகை காலங்களை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்னும் புகார் காரணமாக 120 ஆம்னி பேருந்துகள் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக சிறை பிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி 2,092 பேருந்துகளுக்கு சுமார் ரூ.37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து இன்று(அக்.,24)மாலை 6 மணிக்கு மேல் எந்தவொரு ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படாது என்று தென்மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பானது அறிவித்துள்ளது. இதனால் பண்டிகை காலம் முடிந்து ஊர்களுக்கு திரும்ப முன்பதிவு செய்திருந்த பயணிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
'மக்கள் பீதியடைய வேண்டாம்' - மாறன் பேட்டி
இத்தகைய சூழலில் தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் மாறன் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், மக்கள் பீதியடைய வேண்டிய அவசியமில்லை. தமிழகத்தில் இன்று வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும். 'வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளே சிறை பிடிக்கப்பட்டுள்ள நிலையில், எங்கள் சங்கத்தில் 1,500 பேருந்துகள் உள்ளன. அவை அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்' என்று கூறியுள்ளார். இதனிடையே தென்மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்போடு தமிழக அரசின் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அதன் பின்னரே அடுத்தகட்ட முடிவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.