வகுப்புவாத வன்முறைகளை அடுத்து ஒடிசாவில் ஊரடங்கு
இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து ஒடிசாவில் உள்ள பாலசோரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை சமூகத்தினரின் மதக் கொண்டாட்டத்தின் போது ஒரு பசு படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுந்தததை அடுத்து இந்த வன்முறை தொடங்கியது. மாவட்ட நிர்வாகம் பதற்றமான பகுதிகளில் இணையதள சேவையை நிறுத்தி வைத்துள்ளது . மேலும், மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று நள்ளிரவு வரை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சாலையில் வைத்து விலங்குகளை பலி கொடுக்கக்கூடாது என்று கூறி நடத்தப்பட்ட போராட்டத்துடன் இந்த மோதல் தொடங்கியது. எதிர்க் குழுவினர் போராட்டக்காரர்கள் மீது கற்களை வீசியதனால் இது வன்முறை மோதலாக மாறியது என்று கூறப்படுகிறது.
144வது பிரிவின் கீழ் தடை உத்தரவு
நேற்று இரவு கோலாபோகாரி, மோதிகஞ்ச் மற்றும் சினிமா சாக் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்துள்ளன. அந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் கற்கள், தடிகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்தி வாகனங்களுக்கு தீ வைத்தனர். மேலும், பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்து அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள் மீது கற்களை வீசிய அவர்கள், அவற்றை தீ வைத்து எரித்தனர். மேலும், சாலைகளையும் அவர்கள் நாசப்படுத்தினர். இதன் விளைவாக மூன்று பேர் காயமடைந்தனர் மற்றும் பல மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. நிலைமையை கட்டுப்படுத்த, போலீசார் தடியடி நடத்தி, 144வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பித்தனர். அப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் காவல்துறை இயக்குநர்(சட்டம் மற்றும் ஒழுங்கு) சஞ்சய் குமார் தற்போது பாலாசோரில் நிறுத்தப்பட்டுள்ளார்.