யுஜிசி-நெட் மறுதேர்வுக்கான பெரிய மாற்றத்தை அறிவித்தது என்டிஏ
நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி(என்டிஏ), ரத்து செய்யப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு-தேசிய தகுதித் தேர்வுக்கான(யுஜிசி-நெட்) புதிய தேதிகளை நேற்று இரவு அறிவித்தது. ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை யுஜிசி-நெட் மறுதேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேனா மற்றும் காகித(ஆஃப்லைன்) முறையில் நடத்தப்பட்ட முந்தைய தேர்வை போலல்லாமல், கணினி அடிப்படையிலான தேர்வு(CBT) முறையில் மறுதேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஜிசி நெட் உடன், மற்ற தேர்வுகளுக்கான தேதிகளையும் என்டிஏ வெளியிட்டுள்ளது. NCET 2024 தேர்வு ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என்றும், கூட்டு CSIR UGC NET ஜூலை 25 முதல் 27 வரை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சத்திற்கு விர்க்கப்பட்ட வினாத்தாள்
அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவுத் தேர்வு(AIAPGET) 2024, திட்டமிட்டபடி ஜூலை 6 அன்று நடைபெறும். UGC-NET 2024 தேர்வில் மோசடி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்ற குற்றசாட்டு எழுந்ததை அடுத்து அது உடனடியாக ரத்து செய்யப்பட்டது. அது ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், டார்க்நெட்டில் வினாத்தாள் கசிந்து, டெலிகிராம் செயலியில் பரவியதாக தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன், ஜூன் 16ம் தேதி, வினாத்தாள் கசிந்து, ரூ.5 லட்சம் என்ற விலைக்கு விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.