தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இத்தனை நாள் விடுமுறையா?
2024 நவம்பரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆரம்பமே மகிழ்ச்சியைத் தரும் வகையில் நவம்பர் 1 அன்று தீபாவளியை முன்னிட்டு கூடுதல் விடுமுறையுடன் மாதம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நவம்பர் மாதத்தில் மொத்தமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எத்தனை நாள் விடுமுறை கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம். தமிழ்நாட்டில் பள்ளிகள் நவம்பர் மாதத்தில் மொத்தம் 21 வேலை நாட்களைக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் கல்லூரிகளுக்கு தனிப்பட்ட அட்டவணையைப் பொறுத்து மாறுபடும் வேலை நாட்கள் இருக்கலாம். நவம்பர் 1, 2, 3, 10, 16, 17, 23, 24 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வழக்கமான வார விடுமுறைகள் என மொத்தம் ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
நவம்பர் 1ஆம் தேதி கொடுக்கப்பட்ட தீபாவளி விடுமுறையை ஈடுகட்ட, நவம்பர் 9 சனிக்கிழமை அன்று வகுப்புகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஒன்பது நாள் விடுமுறையும், தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் பத்து நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பர் மாதத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்துள்ளது. இதனால், அதிக மழை பெய்தால் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்கலாம்.