நவம்பர் 1ம் தேதி - எல்லை போராட்ட தியாகிகள் தினம் அனுசரிப்பு
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற பின்னர், 1956ம் ஆண்டு நாடு முழுவதும் மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அவ்வாறு பிரிக்கையில், அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து சில பகுதிகள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரிக்கப்பட்டதாக தெரிகிறது. அதில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழ்நாடு மாநிலத்தோடு இணைக்க ஓர் பெரும் போராட்டம் நடந்துள்ளது. அந்த போராட்டத்தில் ஈடுபட்ட பலர் உயிரிழந்த நிலையில், பலர் சிறை சென்றனர். இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டு தியாகம் செய்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் தான் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ம் தேதியினை தமிழ்நாடு எல்லை போராட்ட தியாகிகள் தினமாக அனுசரித்து வருகிறது என்று வரலாறு தெரிவிக்கிறது.
'மேன்மைக்குரிய தமிழ் தியாகிகளை மறக்காமல் போற்றவேண்டியது நமது கடமை' - மு.க.ஸ்டாலின்
அதன்படி இன்று(நவ.,1) இந்த எல்லை போராட்ட தியாகிகள் தினம் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஓர் பதிவினை செய்துள்ளார். அதில் அவர், 'தமிழ்நாட்டின் பகுதிகளாக இன்று திருத்தணியும், கன்னியாகுமரியும் இன்று உள்ளது என்றால் அது அவ்வளவு எளிதாக நடந்திடவில்லை' என்றும், 'எண்ணற்ற மற்றும் தன்னலமற்ற பல தியாகிகளின் தமிழ்நலம் மிக்க போராட்டம் தான் தமிழகத்தின் தற்போதைய பல பகுதிகளை மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது நம்மால் பெற முடிந்தது' என்றும் பதிவு செய்துள்ளார். மேலும் அவர், 'இத்தகைய மேன்மைக்குரிய தமிழ் தியாகிகளை மறக்காமல் போற்றவேண்டியது நமது கடமை' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.