அதானி குழும பிரச்சனைகளைப் பற்றி பேசிய அமித்ஷா
அதானி குழும பிரச்சனைகள் குறித்த மத்திய அரசு எந்த பதிலும் அளிக்காததால் அதிருப்தியில் இருக்கும் எதிர்க்கட்சிகளின் சர்ச்சைக்குரிய வாதங்களுக்கு இடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அதற்கு பதிலளித்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் இந்த பிரச்சனை குறித்து விசாரிக்க ஆரம்பித்து விட்டதால் தான் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது என்று கூறிய அமித்ஷா, "பாஜகவிடம் மறைக்கவோ பயப்படவோ" எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். "உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஒரு அமைச்சராக, உச்ச நீதிமன்ற விவகாரம் தொடர்பாக நான் கருத்து கூறுவது சரியல்ல. ஆனால் இதில், பாஜகவிடம் மறைக்கவோ பயப்படவோ எதுவும் இல்லை." என்று அவர் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்திற்கு பதிலளித்த மத்திய அரசு
ஹிண்டன்பர்க்-அதானி பிரச்சனை பெரும் அரசியல் பிரச்சனையாக மாறி இருக்கிறது. அதானி குழுமத்திற்கு சார்பாக இந்திய அரசு இருப்பதாகவும் முதலாளித்துவ அரசாக பாஜக அரசு செய்யப்படுவதாகவும் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, நாடாளுமன்றத்தில் சிறப்பு விசாரணை குழு அமைக்கக் கோரி, எதிர்க்கட்சிகள் போராட்டம் செய்தனர். அதானி குழுமத்தில் முதலீடு செய்திருக்கும் LIC மற்றும் பிற பொதுத்துறை வங்கிகளைக் குறித்து அவர்கள் கேள்விகளைக் எழுப்பியுள்ளனர். அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து முதலீட்டாளர் நலன்களைப் பாதுகாக்க ஒரு குழுவை அமைக்க SEBI ஒப்புக்கொண்டதாக மத்திய அரசு நேற்று(பிப் 13) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. SEBI என்பது பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனைக்கான வாரியமாகும்.