அதானி-ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கையை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் ஒரு குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் விஷால் திவாரி, இன்று(பிப் 9) தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன் இந்த அவசரப் பட்டியல் மனுவைக் குறிப்பிட்டார். நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அந்த அமர்வில், இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட தனி மனு பிப்ரவரி 10ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என்பதை திவாரி தெரிவித்தார். அதன்பின், தனி மனுவுடன் தனது மனுவையும் வெள்ளிக்கிழமை விசாரிக்க வேண்டும் என்று அவர் நீதிபதிகளிடம் வலியுறுத்தினார். அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை மேற்பார்வையிட ஒரு சிறப்புக் குழு
திவாரி தனது பொது நல மனுவில்(PIL), பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.500 கோடிக்கு மேலான கடன்களின் சாங்க்ஷன் கொள்கையை மேற்பார்வையிட ஒரு சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார். அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில், அதிக கடன் வைத்திருக்கும் நிறுவனம் என்றும் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க "வரி ஏமாற்று புகலிடங்களை" பயன்படுத்தும் நிறுவனம் என்றும் அதானி குழுமத்தை விமர்சித்திருந்தது. மேலும், பங்குகளை கையாளுதல், கணக்கியல் மோசடி போன்ற குற்றச்சாட்டுகளும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், அதானி குழும பங்குகள் வெகுவாக கடந்த வாரத்தில் இருந்து சரிவடைய தொடங்கியது.